சர்வதேச சமூகம் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும் என்று வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.
சென்னை,
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலின் ஆண்டு தினத்தை முன்னிட்டு தமது முகநூல் பக்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறியிருப்பதாவது:-
2001-ம் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவர்களது தியாகம், நம் நாட்டு மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும். இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் கமலேஷ் குமாரி முதலாவதாக பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கொண்டு, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் தெரிவித்தார். அவர் துரிதமாக செயல்பட்டதன் வாயிலாக பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது.
ஜனநாயகத்தின் வழிபாட்டுத் தலத்தின் மீது அண்டை நாட்டின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலோடு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகையே உலுக்கியது. அதே ஆண்டில் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தன.
ஜனநாயகம் மற்றும் உலக பொருளாதாரத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, மனிதத்துவத்தை இருளில் மூழ்கச் செய்வதே பயங்கரவாத அமைப்புகளின் ஒரே குறிக்கோள்.
ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம் மற்றும் உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் ஆகிய தற்கால நாகரிகத்தின் முக்கிய மாண்புகளுக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை உலக நாடுகள் இணைந்து தடுக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story