திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்


திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Dec 2020 11:27 PM IST (Updated: 15 Dec 2020 11:27 PM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரம்- நாகர்கோவில் பயணிகள் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகர்கோவில், 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு, நாகர்கோவில்-கோவை பகல் நேர பயணிகள் ரெயில், நாகர்கோவில்-கோவை இரவு நேர சூப்பர் பாஸ்டு ரெயில் என 2 ரெயில்கள் மட்டுமே இயங்குகின்றன. இதில் பகல் நேரத்தில் செல்லும் நாகர்கோவில்- கோவை பயணிகள் ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு இன்னும் சில நாட்களில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட ரெயில் இனி பல்வேறு நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த ரெயில் நாகர்கோவில்-கோவை மார்க்கத்தில் நாங்குநேரி, நெல்லை, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

அதேநேரத்தில் தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல்கினறு, வடக்கு பணக்குடி, வள்ளியூர், செங்குளம், மேலபாளையம், தாழையூத்து போன்ற ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்காமல் செல்லும். இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்ட கோவை ரெயில் தோவாளை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை எனில் மாற்று ஏற்பாடாக நாகர்கோவில்- நெல்லை மார்க்கத்தில் சிறிய ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் நலன் கருதி திருவனந்தபுரம்- நாகர்கோவில் பயணிகள் ரெயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதே போல நெல்லையில் இருந்து காலையில் புறப்படும் பயணிகள் ரெயிலையும், நாகர்கோவில் இருந்து காலையில் கொச்சுவேலிக்கு புறப்படும் பயணிகள் ரெயிலையும் இணைத்து ஒரே ரெயிலாக நெல்லை- திருவனந்தபுரம் பயணிகள் ரெயில் என இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story