ரஜினியின் கட்சி: ஆட்டோ சின்னம் தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மையா?
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து வெளியான தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியது.
சென்னை,
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்ற முழக்கங்களுடன், கட்சி தொடங்கும் அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டார், நடிகர் ரஜினிகாந்த். தான் தொடங்கப் போகும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நியமித்த ரஜினி, ஜனவரியில் அரசியல் கட்சியைத் தொடங்க இருப்பதாகவும், டிசம்பர் 31-ல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ரஜினி கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கட்சியின் கொடி உள்ளிட்டவை எப்படி இருக்கும் என விவாதங்கள் பரபரத்தன. இந்த நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் பெயர், மக்கள் சேவை கட்சி என்றும், அதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன.
அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இதுகுறித்த தகவல் இடம் பெற்றிருந்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது. சென்னை எர்ணாவூரை தலைமையிடமாகக் கொண்டு, அகில இந்திய மக்கள் சக்தி கழகம் என்ற பெயரில் இயங்கிவந்த அந்தக் கட்சி, செப்டம்பரில் மக்கள் சேவை கட்சியாக பெயர் மாற்றம் பெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கும் விதமாக, சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி மக்கள் சேவை கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதில், கட்சியின் முதல் விருப்பமாக பாபா படத்தில் ரஜினி பயன்படுத்திய இருவிரல் முத்திரையும், இரண்டாவது முன்னுரிமையாக ஆட்டோ சின்னத்தையும் ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், பாபா முத்திரையுடன் இருக்கும் சின்னம், காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தோடு ஒத்திருப்பதால், ஆட்டோ சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் மெகா ஹிட் அடித்த பாட்ஷா படத்தில், ஆட்டோக்காரன் கெட்டப் இடம் பெற்றிருப்பதால், இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இன்னொருபுறம், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது குறித்த செய்தியை, வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மட்டுமே வெளியிடும் தேர்தல் ஆணையம், தற்போது டிசம்பர் மாதமே வெளியிட்டதோடு, ரஜினி கட்சி என தகவல் வெளியானதால் மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நிர்வாகிகளை காத்திருக்கும் படி அறிவுறுத்தி இருக்கிறது, ரஜினி மக்கள் மன்றம்.
இதுதொடர்பாக இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாநில நிர்வாகி சுதாகர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது
அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கும் ரஜினி, தான் ஏற்கனவே கூறியபடி, டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போது, அனைத்து கேள்விகளுக்கும், யூகங்களுக்கும் விடை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story