விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து இல்லை - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படமாட்டாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கரூர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்?
பதில்:- கொரோனா தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை. வந்த உடனேயே நான் ஏற்கனவே கூறியபடி இந்த தொற்றை குணப்படுத்தக்கூடிய தடுப்பூசி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பாக இலவசமாக போடப்படும்.
கேள்வி:- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என கூறப்படுகிறதே?
பதில்:- கொரோனா பாதிப்பு தான் குறைந்து கொண்டே வருகிறதே? கரூரில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை 5 என்ற அளவிற்கு வந்து விட்டதே. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவதை கடைபிடிக்கவேண்டும். நான் வருகிற வழியில் பார்த்தபோது பலர் முக கவசம் அணியவில்லை. இந்த நோயை முக கவசம் அணிவதன் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். வெளிநாடுகளில் முக கவசம் அணியாததால் இந்த நோய் மீண்டும் பரவ தொடங்கியதால் இப்போது அங்கு மறுபடியும் ஊரடங்கு போட்டுவிட்டார்கள்.
கேள்வி:- தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என ஒரு தகவல் பரவி வருகிறதே?
பதில்:- இது எதிர்க்கட்சிகள் செய்யக்கூடிய சூழ்ச்சி. தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரப்போகிறது. அதனை கருத்தில் கொண்ட சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். நான் ஏற்கனவே பல முறை சொல்லிவிட்டேன். மின்சாரத்துறை அமைச்சரும் இங்கே தான் இருக்கிறார். ஜெயலலிதா அரசை பொறுத்தவரைக்கும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை இந்த அரசு தொடர்ந்து வழங்கும் என்பதை உறுதியிட்டு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:- எடப்பாடி பழனிசாமி விவசாயியே அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?
பதில்:- அவர் சொல்லி நான் விவசாயி என தெரியவேண்டிய அவசியம் இல்லை. நான் விவசாயி தான் என்பது ஊர்க்காரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே அவர் எனக்கு சான்றிதழ் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் சட்டமன்ற தேர்தலிலும் இடம்பெறுமா?
பதில்:- இப்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த கட்சியும் விலகி போகவில்லையே?
கேள்வி:- அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணி தொடரும் என நீங்கள் அறிவித்ததை அவர்கள் (பா.ஜ.க.) இதுவரை உறுதி செய்யவில்லையே?
பதில்:- கூட்டணி இல்லை என அவர்கள் கூறவில்லையே. நாடாளுமன்ற தேர்தலில் இடம் பெற்ற கட்சிகள் எங்கள் கூட்டணியில் சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து நீடிக்கும்.
கேள்வி:- தமிழகத்தில் போலி வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:- இவை எல்லாம் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவேண்டியது. அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசு இதில் தலையிடுவதற்கு எந்த வித முகாந்திரமும் கிடையாது. தேர்தல் கமிஷனில் இதுபற்றி முறையிட்டால் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story