சென்னையில் 210 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 210 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரி விடுதிகளில் தங்கி இருந்த 750 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து, முதற்கட்டமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 550 மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அதில் 3 மாணவர்களும், 3 மாணவிகளும் அடங்குவார்கள்.
அந்த 6 பேரையும் கல்லூரி விடுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட 6 பேருக்கும் எந்த வித அறிகுறியும் இல்லாமலேயே கொரோனா இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழக விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், அறிகுறி இருந்தால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிலையில், சென்னையில் 210 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
டிச.16 வரை 6,344 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் 210 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3,773 பேருக்கு நெகட்டிவ் முடிவுகள் வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2361 பேருக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை என்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story