முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது - கமல்ஹாசன்
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டரில், “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவிட்டிருந்தார். மேலும் தனது டுவிட்டரில், “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை.... அவர் எப்போதும் வால் பிடிப்பார். ‘எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ எனும் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், லஞ்சம் ஊழலில் அரசு எவ்வழியோ, அதிகாரிகள் அவ்வழி என்று கமல் தெரிவித்து கருத்து குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, “கமல் ரிட்டையர்ட் ஆகி அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதில் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படியிருக்கும்? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு குடும்பம் கூட நல்லாயிருக்காது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன இருக்கிறது? சொல்லுங்க பார்க்கலாம். கமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக இல்லை. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவர் வேலை. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கெட்டுப் போவார்கள்.
எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்கு பயன்படும்படி எவ்வளவு பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா? அவருடைய படத்தை பார்த்தால் அதோடு அந்தக் குடும்பம் காலி. அதனால் கமல் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story