தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2020 5:26 PM GMT (Updated: 17 Dec 2020 5:38 PM GMT)

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து இருக்கிறது. ஒரு வாரத்துக்கு மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது.

வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நாளையும் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று) தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக நாளை தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களான விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  இவ்வாறு அவர் கூறினார்.  இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், மணம்பூண்டி 17 செ.மீ., ஆனந்தபுரம், முகையூர், திருக்கோவிலூர் தலா 16 செ.மீ., புதுச்சேரி 15 செ.மீ., மயிலம் 13 செ.மீ., உளுந்தூர்ப்பேட்டை 12 செ.மீ., கடலூர், கள்ளக்குறிச்சி தலா 10 செ.மீ., சங்கராபுரம், சேத்தியாத்தோப்பு தலா 8 செ.மீ., வேப்பூர், மரக்காணம், திண்டிவனம், புவனகிரி, வானூர் தலா 7 செ.மீ., காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, வீரகனூர், பெரம்பலூர், பெலாந்துறை, லெப்பைக்குடிக்காடு, பரங்கிப்பேட்டை தலா 6 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.


Next Story