நீலகிரியில் வசிக்கும் படுகர் இனமக்களை மீண்டும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி கோரிக்கை


நீலகிரியில் வசிக்கும் படுகர் இனமக்களை மீண்டும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி கோரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2020 8:37 PM GMT (Updated: 17 Dec 2020 8:37 PM GMT)

நீலகிரியில் வசிக்கும் படுகர் இனமக்களை மீண்டும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட தனி சமுதாயமாகப் படுகர் இனமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஏறத்தாழ 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட படுகர் இனமக்கள், 1951-ம் ஆண்டு வரை பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் படுகர் இனமக்கள் பழங்குடியின பட்டியலில் இருந்து எந்த காரணமும் கூறப்படாமல் நீக்கப்பட்டார்கள்.

இப்பிரச்சினை குறித்து தொடரப்பட்ட வழக்கில், நீலகிரியில் உள்ள மத்திய அரசின் பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையைப் பெற்று முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டது. இந்த ஆணையை கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட பழங்குடியின ஆராய்ச்சி மையம், கடந்த 22-10-2020 அன்று படுகர் இனமக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை தன்னிச்சையாக தள்ளுபடி செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. 

இது படுகர் இனமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவர்களது வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளார்கள். எனவே, படுகர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துகின்ற வகையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story