6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதனைத்தொடர்ந்து வரும் இரண்டு நாட்களுக்கு தென்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ட வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
தமிழகம் மற்றும் புதுவையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 9 விழுக்காடு கூடுதலாக பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
Related Tags :
Next Story