எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள் தவிர வேறு யாரும் வாரிசு இல்லை - முதல்வர் பழனிசாமி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 18 Dec 2020 3:41 PM IST (Updated: 18 Dec 2020 3:41 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள் தவிர வேறு யாரும் வாரிசு இல்லை - முதல்வர் பழனிசாமி

சேலம்,

முன்னாள் முதல்வர் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கு வாரிசு என்று எவரும் கிடையாது. இருவருக்கும் மக்கள் தான் வாரிசு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் பனமரத்துப்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி வாரிசு பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், நாகர்கோவிலில் பேசும் போது, எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான் என்றும் நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

எம்ஜிஆரை பார்க்காதவர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக உள்ளனர். என்னை போல பல நடிகர்கள் அதிமுகவில் உள்ளனர். நான் கடமையை செய்ய வந்தவன், காசு வாங்க வந்தவன் அல்ல என்று சொன்னார். கமல்ஹாசனின் பேச்சு அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று சேலம் பனமரத்துப்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது என்றார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காகவே மினி கிளினிக் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது என்று கூறினார்.

கொரோனா தடுப்புப்பணிக்காக மாவட்டந்தோறும் சென்று நேரடியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன். வீரபாண்டி பிரிவில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

 எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. இருவருக்குமே மக்கள்தான் வாரிசு என்றும் சொன்னார். அதிமுக அரசு நேரடியாக மக்களோடு பேசி வருகிறது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார். வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை விமர்சித்து வருகிறார். மக்களை சந்திப்பது பெரிதா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? என்றும் கேட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.


Next Story