சுய முயற்சியால் செயலிகளை உருவாக்கி விருதுகளை குவித்த சென்னை மாணவன்
கொரோனா காலத்திலும் சுய முயற்சியால் பல செயலிகளை உருவாக்கி சென்னையை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் சாதனை படைத்துள்ளான்.
சென்னை,
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் மராட்டியத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. அதிலும் தலைநகர் சென்னை, அதிக பாதிப்புகளை கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கில் முடங்கிய சென்னை மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்பவில்லை. இதுபோக கனமழை, வெள்ளம் மற்றும் சூறாவளி என இந்த ஆண்டு சென்னையில் வசிக்கும் மக்களுக்கு சோதனை காலம் போன்றே கடந்து சென்றுள்ளது.
கொரோனா அச்சத்தினால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறப்பு தள்ளி போகிறது. இதனால், மாணவர்கள் பல மாதங்களாக வீட்டிலேயே அடங்கி கிடக்கின்றனர். ஆனால், ஆன்லைன் வழி கல்வி பயில அனுமதி உள்ளது.
இதனை பயன்படுத்தி சென்னையை சேர்ந்த பிரதீக் என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுய முயற்சியால் பல்வேறு செயலிகளை கண்டறிந்து சாதனை படைத்து உள்ளான். இணையதளத்தில் கிடைக்கும் இலவச தகவல்களை கொண்டே இதற்கான முயற்சியை தொடர்ந்து உள்ளான்.
நம்மில் பலரும் உபயோகிக்கும், ஜூம், வின்டி மற்றும் கூகுள் மேப் ஆகியவற்றுக்கு கூட மாற்றாக புதிய செயலிகளை உருவாக்கும் திறனை பெற்றுள்ளான். இதற்காக பல்வேறு விருதுகளையும் மற்றும் 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் பரிசாக பெற்றுள்ளான். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பிடம் (இஸ்ரோ) இருந்தும் பல பதக்கங்களை பெற்றுள்ளான்.
வருங்காலத்தில் விஞ்ஞானியாக வரவேண்டும் என்பது தனது விருப்பம் என கூறும் பிரதீக், ரசாயன பொருட்கள் எதுவுமின்றி மின்னணுவியல், கோடிங் உள்ளிட்டவற்றை கொண்டே ராக்கெட்டை உருவாக்க வேண்டும் என்பதே தனது கனவு என கூறியுள்ளான்.
Related Tags :
Next Story