திரையரங்குகளில் கேளிக்கை வரியை மேலும் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ


திரையரங்குகளில் கேளிக்கை வரியை மேலும் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 19 Dec 2020 1:53 AM IST (Updated: 19 Dec 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

திரையரங்குகளில் கேளிக்கை வரியை மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே குமரெட்டியாபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரையரங்குகளில் 100 சதவீத மக்களை அனுமதிக்குமாறு திரையரங்கு உரிமையாளர்கள் இதுவரையிலும் அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதித்த போதிலும், அதற்கு கூட மக்கள் திரையரங்குகளுக்கு செல்லவில்லை. திரையரங்குகளில் திரைப்படங்களை பார்ப்பதற்காக அதிகமான மக்கள் செல்லும்போது, திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தால், அங்கு கூடுதல் மக்களை அனுமதிப்பதற்கு அரசு பரிசீலிக்கும்.

திரையரங்குகளுக்கான 30 சதவீத கேளிக்கை வரியை அ.தி.மு.க. அரசுதான் 8 சதவீதமாக குறைத்தது. இதனையும் குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடி இருப்பதால், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ெதரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அனைத்து அரசு அதிகாரிகளையும் ஒட்டுமொத்தமாக குறை கூறுகிறார். நடிகர் கமல்ஹாசன் எத்தனை படங்களில் நடித்துள்ளார்? ஒளிவு மறைவு இல்லாமல் எவ்வளவு சம்பளம் வாங்கினார்? எவ்வளவு வருமான வரி செலுத்தி உள்ளார்? என்று அவரால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?. அவர் வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்னர் மற்றவர்களை குறை கூறட்டும்.

எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தபோது நாங்கள் ரசிகர்களாக இருந்தோம். அவர் கட்சியை தொடங்கியதில் இருந்து அவரது தொண்டர்களாக இருக்கின்றோம். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வினருக்கே சொந்தம். இதில் மற்றவர்கள் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. சொந்தம் கொண்டாடினால் அதற்கு பெயர் வேறு. மக்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அரசு உத்தரவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story