எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் முதல் அமைச்சருக்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன்: மு.க. ஸ்டாலின் பேச்சு
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் முதல்–அமைச்சருக்கு தான் வழிகாட்டியாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 67 மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
நான் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், முதல் அமைச்சருக்கு வழிகாட்டக்கூடிய ஒருவனாக நான் இருக்கிறேன். வழிகாட்டுவதை அவர் பின்பற்றுகிறாரா? என்ற சந்தேகம் இருப்பது வேறு பிரச்சினை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை.
தி.மு.க. எதிர்க்கட்சி. ஆனால் நாம் அறிவிப்பதை பார்த்துத்தான் ஆளுங்கட்சியினர் அவற்றைச் செய்யக் கூடிய நிலைமை உள்ளது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களை பொறுத்தவரையில் அதுதான் ஆளுங்கட்சி. அதுதான் உண்மை. இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப்போகிறோம்.
உங்களை எல்லாம் பார்த்த பிறகு எனக்கு அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் பேச தோன்றுகிறது. அந்த அளவுக்கு மக்களிடத்தில் ஒரு எழுச்சியை நாம் காணுகிறோம். ஏனென்றால், மக்களுக்காக இருந்து, மக்களோடு வாழ்ந்து, மக்களுடைய பிரச்சினைகளுக்கு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய 10 ஆண்டுக்காலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களை பற்றி கவலைப்படுகிற ஒரு இயக்கம் தி.மு.க. என்பது உங்களுக்கு தெரியும்.
ஆகவே 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்தாலும், ஏற்கனவே 5 முறை ஆட்சியில் இருந்து உள்ளோம். 5 முறை ஆட்சியில் இருந்த பொழுது மக்களுக்கு என்னென்ன திட்டங்களை உருவாக்கினோம், என்னென்ன தொழிற்சாலைகளை உருவாக்கினோம், என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். ஆனால் இன்றைக்கு தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து வருகிற தொழிலதிபர்கள் எல்லாம், இங்கு தொழில் தொடங்க அஞ்சி, பயந்து ஓடக்கூடிய நிலைமை இப்பொழுது உள்ளது.
அதற்கு காரணம் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்கும் முயற்சியில் நாம் உடனடியாக ஈடுபட வேண்டும். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு 4 மாத காலத்தில் வருகிற தேர்தல்தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
எனவே, அந்த தேர்தலை நல்ல வகையில் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆட்சியில் இல்லாத காலத்திலேயே இவ்வளவு செய்யும் பொழுது, ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை நீங்கள் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உங்களது நண்பர்கள், உங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், எல்லோரிடத்திலும் இதை எடுத்து சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.