காங்கிரஸ் ஆட்சியில் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு: பா.ஜனதா குற்றச்சாட்டு


காங்கிரஸ் ஆட்சியில் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு:  பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Dec 2020 2:28 PM GMT (Updated: 19 Dec 2020 2:28 PM GMT)

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என பா.ஜனதா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தி.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பா.ஜனதா ஆட்சியில் எரிவாயு சிலிண்டர் திட்டத்தில் போலி பயனாளிகள் தவறான இணைப்புகள், செயல்பாட்டில் இல்லாத இணைப்புகள், மானியம் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்த மக்கள் என ரூ.4.49 கோடி இணைப்புகளின் மூலம் இதுவரை ரூ.71,301 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

பொது வினியோக முறை திட்டத்தில் சுமார் 3 கோடி போலி பயனாளிகள் அகற்றப்பட்டதன் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.66,897 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 கோடிக்கும் அதிகமான போலி பயனாளிகள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ.25,672 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் அரசு ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கிய நிலையில், தற்போதைய பா.ஜ.க. அரசு ரூ.1.75 லட்சம் கோடிக்கும் அதிகமாக சேமிப்பின் மூலம் வருவாயை அதிகரித்துள்ளது. அதோடுகூட, ஏழை–எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்களின் மூலம் சுரண்டி கொள்ளையடித்து கொண்டிருந்தவர்களை அகற்றி உண்மையிலேயே மானியங்கள் தேவைப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ளது.

ஊழல், லஞ்சம், முறைகேடுகளை ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை செலுத்திக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மக்கள் பணி தொடரும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story