பா.ஜ.க. கூட்டணி, முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் - மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி


பா.ஜ.க. கூட்டணி, முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் - மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 20 Dec 2020 2:22 AM IST (Updated: 20 Dec 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

பெரம்பலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களின் நன்மைகளை விளக்கி விவசாயிகளிடம் கூறும் வகையில், விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற, விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து வந்த பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், வழியில் பெரம்பலூர் வந்தார். அவர் துறைமங்கலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழ்நாட்டில் வருகிற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் கட்சிகள் குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். அதேபோல் தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் கட்சி மேலிடம் முடிவெடுக்கும்.

தற்போது பிளஸ்-2 பாடத்திட்டத்தில் பாடத்தொகுப்பு குறைப்பு செய்துள்ளதால், நீட் தேர்வின்போது மாணவ- மாணவிகள் தேர்வை எதிர்கொண்டு எழுதுவதற்கு சிரமப்படுவார்கள் என்ற நடைமுறை கருத்து உள்ளது. அதை ஏற்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊடகத்தினர் ஆகியோர் நீட், கேட், பொறியியல் (ஜே.இ.இ) தேர்வு, ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். சட்ட நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான ஆர்வத்தை மாணவ, மாணவிகளிடம் புகுத்தி, போதிய அறிவுடன் தேர்வு எழுதிட ஊக்கப்படுத்திட வேண்டும்.

புதிய வேளாண்மை திட்டங்களின் நன்மைகள் குறித்து ஆயிரம் இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தும் இயக்கம் கடந்த 8-ந்தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 200 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) தஞ்சையில் நடைபெற உள்ள விவசாயிகள் சந்திப்பு இயக்க கூட்டத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திருச்சி கோட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணா சிவசுப்ரமணியன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராம்சந்திரசேகர், துணைத்தலைவர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் மாநில தலைவர் முருகன், குன்னம், அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிகளில் விவசாயிகள் சந்திப்பு கூட்டங்களுக்காக புறப்பட்டு சென்றார்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வேளாண் சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளாமலேயே நகல்களை கிழித்தெறிந்துள்ளது கண்டிக்கத்தக்கது. 

வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானவை என்பது தவறான கருத்து. தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டணி குறித்தும், முதல்- அமைச்சர் வேட்பாளர் குறித்தும் கட்சியின் தேசிய தலைமை முடிவெடுக்கும், அறிவிக்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன், என்றார்.

Next Story