திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர் - ஸ்டாலின்
திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
வரும் 23-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10-ஆம் தேதி வரை மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று சென்னையில் நடைபெற்று வரும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும், ஆனால் அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர். முக்கிய காலகட்டத்தில் இந்த ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
திமுக சார்பில் 16,000 கிராம சபைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி மலர வேண்டும் என்பதே திமுகவினர் லட்சியமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியனின் வேட்பாளர்கள் கருணாநிதியின் வேட்பாளர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கழக ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது கொள்கை. திமுக வெற்றி பெறும், ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள். வரும் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story