லஞ்ச வழக்கில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் மீது சொத்து குவிப்பு வழக்கு


லஞ்ச வழக்கில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் மீது சொத்து குவிப்பு வழக்கு
x
தினத்தந்தி 21 Dec 2020 1:31 AM IST (Updated: 21 Dec 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை சூப்பிரண்டு பாண்டியன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்கிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 2½ மாதங்களில் லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடிபட்ட 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரூ.7 கோடி அளவுக்கு லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் லஞ்ச முதலைகளாக புது அவதாரம் எடுத்துள்ளனர். சென்னையில் சுற்றுச்சூழல் துறை சூப்பிரண்டு பாண்டியன் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்க-வைர நகைகள், ரூ.37 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ரூ.7 கோடி அளவுக்கு 18 சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதிகாரி பாண்டியன் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது பெயர் மற்றும் மனைவி, மகள் ஆகியோரது பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்து விவரங்களை கேட்டு பத்திரபதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரது பெயரில் 2 வங்கி லாக்கர்கள் உள்ளதாகவும், அதையும் திறந்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து விவரங்கள் பற்றி முழுமையாக கண்டறியப்பட்டவுடன் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story