தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது- தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா


தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு  மக்களிடம் தான் உள்ளது- தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா
x
தினத்தந்தி 22 Dec 2020 10:53 AM GMT (Updated: 22 Dec 2020 10:53 AM GMT)

பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியதோடு,பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தெரிவித்து உள்ளார்.

சென்னை

தமிழக சட்டசபையின் பதவி காலம் மே மாதம் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்பாக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமி‌ஷன் தொடங்கி உள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவும், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்கவும், அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் இந்திய தேர்தல் கமி‌ஷன் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இந்த குழுவில் தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஸ் குந்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2வது நாளாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர். தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான புத்தகத்தை தேர்தல் ஆணையக்குழு வெளியிட்டது. 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா கூறியதாவது:-

சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்த 2 நாள் ஆலோசனை மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு ஏற்ப தேர்தல் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீகாரில் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். ஒரு மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு குறைந்தது 6 மாதங்கள் தேவை.

தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.வாக்களிக்க வரும் அனைத்து தரப்பினரின் வசதிகளை கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கொரோனா வழிமுறைகள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வர இயலவில்லை என்றால் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்தாலும் வாக்குச்சாவடிகளில் சானிடைசர் வழங்கப்படும், வாக்காளர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும்.

வாக்குச்சாவடிகளுக்கு வர இயலாத மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்கு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்குச்சாவடிகளுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவது தான் வழக்கம். வாக்குக்கு பணம், மது, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது முடிவு செய்ய இயலாது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு படை அதிகம் அமைக்கப்படும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை தேர்தல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

வாக்குச்சாவடிக்கு வர முடியாத முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளை தபால் வாக்கு அளிக்க அனுமதிப்பது தொலைநோக்கு நடவடிக்கை. 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கு உரிமை வழங்குவதில் முறைகேடு செய்ய இயலாது.

80 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்குச் சாவடிக்கு வந்து தான் வாக்களிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது சரியான நடவடிக்கை இல்லை. ஒரே இடத்தில் 3வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என்பது கண்டிப்பான உத்தரவு ஆகும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் விவிபேட் அமைக்கப்படும் . ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்கிற அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு குறித்து மார்ச் மாதம் முடிவுசெய்யப்படும். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.  டிஜிட்டல் வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை உரிய நேரத்தில் வழங்கப்படும்.      

பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு 
மக்களிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார்.



Next Story