லண்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு புதியவகை வைரஸ் தொற்றா?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Dec 2020 10:31 PM GMT (Updated: 22 Dec 2020 10:31 PM GMT)

லண்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு புதியவகை வைரஸ் தொற்றா என்பதை கண்டறிய, அவரது பரிசோதனை மாதிரி புனேவுக்கு அனுப்பப்பட்டது.

ஆலந்தூர், 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு லண்டனில் இருந்து சென்னை திரும்பியவர் புதியவகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் என்னும் கொடூர தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராதநிலையில் இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவுவதாக வெளிவரும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இங்கிலாந்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டுக்கு விமான போக்குவரத்து சேவைக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருந்து டெல்லி வழியாக விமானம் மூலம் சென்னை வந்த என்ஜினீயருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவரை, தனி அறையில் வைத்து டாக்டர்கள் கண்காணிக்கின்றனர்.

இவருக்கு, இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா? என டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இதற்காக அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு சுகாதாரத்துறை நேற்று அனுப்பி இருக்கிறது. அந்த பரிசோதனை முடிவு வந்த பின்னரே, அவர் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? என்பது குறித்து தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த பரிசோதனை முடிவு ஓரிரு நாட்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள் யார்? என்ற விவரங்களை சுகாதாரத்துறை தீவிரமாக சேகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஏதேனும் அறிகுறி இருந்தால், தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வரும் சுகாதாரத்துறை, புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் செய்து வருகிறது.

இதற்கிடையே சென்னை விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை 2-வது நாளாக நேற்று தமிழக சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய ரக வீரியமிக்க கொரோனாவால் மக்கள் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவி வருகிறது. இவ்வகை கொரோனா விரைவாக பரவுகிறதா? என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து தெரிவிப்பார்கள். லண்டனில் இருந்து வரக்கூடிய அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.

லண்டனில் இருந்து வந்த 8 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. லண்டனில் இருந்து டெல்லி வழியாக விமானத்தில் வந்த 7 பேருக்கும் தொற்று இல்லை. கொரோனா தொற்று ஏற்பட்டவர் லண்டனில் இருந்து வரும்போது பரிசோதனையில் தொற்று இல்லை என சான்று வைத்திருந்தார்.

கடந்த 10 நாட்களில் லண்டனில் இருந்து சென்னை வந்த ஆயிரத்து 78 பேரின் விவரங்கள் இ-பாஸ் முலம் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கண்காணிப்படுகிறார்கள். லண்டனில் இருந்து நேரடியாக விமானம் இல்லை என்பதால், பிற நகரங்கள் வழியாக வரும் அனைவரையும் கண்காணிக்க தயார் நிலையில் உள்ளோம்.

லண்டனில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் இறங்கி சாலைமார்க்கமாக பயணிகள் வரக்கூடும் என்பதால், எல்லையிலும் பரிசோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று லண்டனில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு வந்த 3 விமானங்களில் பயணம் செய்த 20 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் 9 பேருக்கு மட்டும் கொரோனா இல்லை. மற்றவர்களின் பரிசோதனை முடிவு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

Next Story