‘திட்டலாம், அணைத்து கொள்ளலாம்’ ‘‘என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’ குஷ்பு பேட்டி


‘திட்டலாம், அணைத்து கொள்ளலாம்’ ‘‘என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’ குஷ்பு பேட்டி
x
தினத்தந்தி 23 Dec 2020 12:59 PM GMT (Updated: 23 Dec 2020 12:59 PM GMT)

‘‘என்னை திட்டவும், அணைத்து கொள்ளவும், விமர்சிக்கவும் கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’, என குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96–வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. மீனவரணி சார்பில் சென்னை மெரினா நடுக்குப்பம் மீன்மார்க்கெட் அருகில் மீனவ பெண்களுக்கு அலுமினிய மீன்கூடை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மீனவரணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஏ.பார்த்திபன், மாவட்ட பொறுப்பாளர் காளிதாஸ், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு, அப்பகுதி மீனவ பெண்களுக்கு அலுமினிய மீன்கூடை மற்றும் மீன்கள் வழங்கினார். முன்னதாக அருகில் உள்ள பயண்டியம்மன் கோவிலில் வழிபட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் சென்று பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பலர் குஷ்புடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:–

நான் வேட்பாளரா?

கேள்வி:– சேப்பாக்கத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கிவிட்டீர்கள். வேட்பாளராக நீங்கள் களமிறங்குவீர்களா?

பதில்:– சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதிக்கு என்னை பொறுப்பாளராக நியமித்துள்ளனர். எனவே எனது பணியை செய்து கொண்டிருக்கிறேன். இத்தொகுதியில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

கேள்வி:– பா.ஜ.க.வின் கட்டமைப்பு இத்தொகுதியில் எப்படி இருக்கிறது? என்னென்ன செய்ய போகிறீர்கள்?

பதில்:– மக்கள் அனைவரும் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்திருக்கிறார். இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய்பிரசாரங்களை தாண்டி இதை நாம் செய்யவேண்டும்.

மக்கள் நம்பிக்கை 

கேள்வி:– சென்னையில் பா.ஜ.க. வலுவாக இருக்கிறதா?

பதில்:– சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மிகப்பெரும் பலமாக இருக்கிறது. மக்கள் ஆதரவும் இருக்கிறது.

கேள்வி:– கட்சி தொடங்கியவுடன் ஆட்சியை பிடிக்க சிலர் நினைக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

பதில்:– ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது தேர்தலின்போது தான் தெரியவரும். யார் நல்லது செய்யபோகிறார்? என்பதை மக்கள் நம்புகிறார்களோ, அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

கேள்வி:– பா.ஜ.க.வை பலப்படுத்த பிற கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பீர்களா?

பதில்:– பா.ஜ.க. என்பது ஒரு திறந்த மைதானம். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைப்பவர்கள், பா.ஜ.க. மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணையலாம். எந்த ஆட்சேபணையும் எங்களுக்கு இல்லை.

கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு 

கேள்வி:– வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்புக்கு ஒன்றுமே தெரியாது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளாரே?

பதில்:– கமல்ஹாசன் எனது நல்ல நண்பர். அவருக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. ‘அரசியல் களத்தில் நெருங்கிய நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை’, என்று எனது அரசியல் ஆசான் கருணாநிதி எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு தி.மு.க.வுக்கு எதிராகவே நான் பேசுகிறேன். ஏனெனில் கருணாநிதி மாதிரி ஒரு தலைவர் இல்லை. இப்போதுள்ள தி.மு.க.வுக்கு, கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

கமல்ஹாசன் எனது நண்பர். என்னை திட்டலாம், என்னை அணைத்து கொள்ளலாம், என்னை பற்றி எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம். கமல்ஹாசனுக்கு அந்த உரிமை இருக்கிறது.

மேற்கண்டவாறு நடிகை குஷ்பு பதிலளித்தார்.

நடனம் ஆடிய குஷ்பு 

 முன்னதாக அவர் நிகழ்ச்சிக்கு வரும்போது செண்டைமேளம் மற்றும் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஒரு பெண்மணி நடனம் ஆடியபடி குஷ்புவை வரவேற்றார். குஷ்புவும் அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் நிகழ்ச்சியில் அலுமினிய மீன்கூடை வழங்கும்போது, அந்த பெண்மணி வரிசையில் வந்தார். அப்போது லேசாக நடனம் ஆடியபடியே குஷ்பு அந்த பெண்மணிக்கு அலுமினிய கூடையை வழங்கினார். அப்போது திரண்டிருந்த பா.ஜ.க.வினர் கைகளை தட்டி உற்சாகம் அடைந்தனர்.


Next Story