9 ஆண்டு ஆட்சியில் அனைத்து துறையிலும் சாதனை அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


9 ஆண்டு ஆட்சியில் அனைத்து துறையிலும் சாதனை அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 28 Dec 2020 12:52 AM GMT (Updated: 28 Dec 2020 12:52 AM GMT)

அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று சென்னையில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (மே மாதம்) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல்- அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக் கப்பட்டுள்ளார்.

அவர், தனது தேர்தல் பிரசாரத்தை சேலத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கினார்.

இந்தநிலையில் அ.தி. மு.க. தேர்தல் பிரசாரத்தின் முதல் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசு கிடையாது. நாம்தாம் வாரிசுகள். தமிழ்நாட்டு மக்கள்தான் வாரிசுகள் என்று வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்து மறைந்தார்கள். இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் எம்.ஜி.ஆர். பெயரைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகள் கூட உச்சரிக்கக்கூடிய பெயர் எம்.ஜி.ஆர்., இந்த இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார் கள். அ.தி.மு.க. வீழ்ந்த வரலாறு கிடையாது. கட்சி, ஆட்சியில் இந்த வரலாற்றை படைத்துக் கொண்டிருக்கிறோம்.

அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சில புல்லுருவிகள், துரோகிகள் இந்த இயக்கத்தை உடைக்க முயற்சித்தார்கள். இங்கே இருக்கிற தொண்டர்கள், நிர்வாகிகள் ஒத்துழைப்போடு அதனை தவிடுபொடியாக்கினோம்.

இன்றைக்கு மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று அவதூறு பிரசாரத்தை, பொய்யான பரப்புரையை தினந்தோறும் பரப்பிக்கொண்டிருக்கிறார். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை புதிய, புதிய திட்டங்கள் மூலம் நாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். இதை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

சென்னை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறோம். கடந்த காலங்களில் சென்னையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலையிருந்தது. இன்றைக்கு அரசு எடுத்த நடவடிக்கையால் 19 இடங்களில்தான் தண்ணீர் தேங்கும் நிலை இருக்கிறது.

ஆனால் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்கிறார். நீங்கள் (மு.க.ஸ்டாலின்) 5 ஆண்டு காலம் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தீர்களே? அப்போது என்ன தூங்கி கொண்டிருந்தீர்களா?. தேர்தல் வரும்போது மட்டும் மு.க.ஸ்டாலின் சென்னையை சுற்றி, சுற்றி வருவார். அரசு மீது பழிசுமத்துவார். ஏமாந்துவிடாதீர்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் கிராமம், கிராமமாக சென்று குறைதீர்க்கிறோம் என்று சொல்லி, மக்களிடம் மனுக்களை வாங்கினார்கள். அந்த மனுக்கள் எல்லாம் குப்பை தொட்டிக்கு போனது. இப்போது மீண்டும் அந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே வாங்கின மனுக்களுக்கே குறைதீர்க்க முடியவில்லையே?. மக்களை ஏமாற்றி, நாடகமாடி, திசை திருப்பி, கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்கள். இப்போது அது நடக்காது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, அசுர பலத்துடன் அ.தி.மு.க. இருக்கிறது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நாம் மிகச்சிறப்பான வெற்றியை பெற முடியும். சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசும்போது, எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை 100 ஆண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக் காக இயங்கும் என்று சொன்னார்கள். அதனை நாம் படைப்போம். அதுதான் நமது லட்சியம். ஒவ்வொரு தொண்டனும் வீறுக்கொண்டு எழுந்து, நாம்தான் வேட்பாளர் என்று எண்ணி, களத்தில் இறங்கி, தேர்தல் என்ற போரிலே நாம் எதிரிகளை ஓட, ஓட விரட்டியடிப்போம். வெல்வோம்.

ஜெயலலிதா நினைவிடம் விரைவில் திறக்கப்படும். இவ்விழாவில் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த வேதாநிலையம் விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும். பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்லலாம்.

நமது மனங்களில் வாழும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் எண்ணத்தை நிறைவேற்றும்விதமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் 3-வது முறை ஆட்சி அமைய பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி நன்றி கூறினார். கூட்டத்தில் அ.தி. மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்களும், ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் உள்பட வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை ‘அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி’ கே.பி.முனுசாமி பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கே.பி.முனுசாமி பரபரப்பாக பேசினார்.

சென்னையில் நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

தற்போது திராவிட இயக்கம் இந்த நாட்டை சீரழித்துவிட்டார்கள் என்று சில தேசிய கட்சிகள் சொல்கிறார்கள். சில சந்தர்ப்பவாதிகள் சொல்கிறார்கள். இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேசிய கட்சிகளுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.

ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் தமிழக அரசு, மத்திய அரசிடம் விருதுகளை பெற்றிருக்கிறது என்றால், இந்த ஆட்சி எவ்வளவு சிறப்பான ஆட்சியாக இருக்கவேண்டும்.

100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு மறைந்திருக்கிறார். இந்த தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த 50 ஆண்டுகளில் இந்த தமிழகத்தை ஆட்சி செய்யக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம்தான்.

கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கே பொருள் இல்லை. தேவையும் இல்லை. எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்று எண்ணத்தோடு எந்த அரசியல் கட்சிகளும் நம்முடன் கூட்டணி வரும்போது இதை சிந்தித்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story