பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டு-முதல்வர் பழனிசாமி


பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டு-முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 29 Dec 2020 7:58 AM GMT (Updated: 29 Dec 2020 7:58 AM GMT)

பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாமக்கல்

வெற்றிநடைபோடும் தமிழகம் என்னும் தலைப்பில் தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மாவட்ட எல்லையான ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் அதிமுகவினர் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கு உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் சென்ற முதலமைச்சர் வழியில் திரண்டிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பின்னர் நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபட்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டு, பரிவட்டம் கட்டப்பட்டது.

வழிபாட்டுக்குப் பின்னர் கோவில் வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். 

தொடர்ந்து அங்குள்ள முதலைப்பட்டி பட்டி அருந்ததியர்  அண்ணாநகர் காலனியில் வீடு வீடாக சென்று பிரசாத்தில் ஈடுபட்டார். அங்கு தொண்டர் ஒருவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசும் போது பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார் என கூறினார்.

மேலும் அவர் பேசும் போது கூறியதாவது:-

"நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி என்னுடைய ஆட்சிக்காலத்திலும் நாமக்கல் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல.

ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை அறிந்து பொங்கல் 2,500 ரூபாய் சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அறிவித்தேன்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு சூழ்ச்சி செய்து நேற்றைய தினமே பொய்யான அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வீடு, வீடாக சென்று வழங்குவதாக ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.

அதிமுகவை பொறுத்தவரை கடந்த ஆண்டு குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்திற்கு சென்ற கட்சிதான் திமுக.

மக்களுக்கு நல்லது செய்வது திமுகவுக்கு பிடிக்காது. மக்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்".இவ்வாறு அவர் கூறினார்.

Next Story