தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்- பாஜக மேலிடப் பொறுப்பாளர்


தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்-  பாஜக மேலிடப் பொறுப்பாளர்
x
தினத்தந்தி 30 Dec 2020 8:40 AM GMT (Updated: 30 Dec 2020 8:40 AM GMT)

தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்

சென்னை

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். 

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் அதிமுக பா.ஜனதா கூட்டணி தொடரும் என்று கூறினர்.

இதனையடுத்து பா.ஜனதா  - அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கருதப்பட்ட நிலையில், அரியலூரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜனதா தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பா.ஜனதா  தலைமையே அறிவிக்கும் என தெரிவித்தார். அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் பலர் முருகனுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உறுதியாக கூறினர். சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக, தன்னுடைய உறுதியை பதிவு செய்திருந்தது.

சென்னை அண்ணாநகரில் பாஜகவின் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தமிழகத் தலைவர் முருகன், மேலிடப் பொறுப்பாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் பா,ஜனதா  மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுதான் கூடி முடிவெடுக்கும் என கூறினார்.

நிர்மலா சீதாராமன் பா.ஜனதாவின் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை எனவும் பேட்டியின்போது ரவி தெளிவுபடுத்தினார்.



Next Story