நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு


நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Dec 2020 11:00 PM GMT (Updated: 30 Dec 2020 11:00 PM GMT)

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருவாரூர்,

தமிழகத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் அகடோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் மத்திய வேளாண்துறை அமைச்சக இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மண்டல அலுவலர் ரனன் ஜெய்சிங், மத்திய நிதித்துறை அமைச்சக துணை இயக்குனர் அமித்குமார், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குனர் சுபம் கார்க், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக உதவி ஆணையாளர் மோகித் ராம், மத்திய மீன்வளத்துறை ஆணையர் பால் பாண்டியன், மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் ஹர்ஷா ஆகிய 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் புரெவி புயலால் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக கனமழையினால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி பகுதி பாமினி, நுனாங்காடு, இடையூர், முத்துப்பேட்டை பகுதி, வடசங்கேத்தி, உப்பூர், வடகாடு கோவிலூர் ஆகிய இடங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

அப்போது பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, அதன் சேத விவரங்களை மத்தியக்குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் சேதமடைந்த வீடுகள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றையும் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு கூடுதல் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திர ரெட்டி, மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வேளாண்துறை இணை இயக்குனர் சிவக்குமார், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் கருங்கன்னி, வடக்குபனையூர் ஆகிய பகுதிகளில் மத்திய குழுவினர் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.அப்போது பாதிப்புகள் குறித்து அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். தொடர்ந்து மத்திய குழுவினருக்கு பயிர் சேத விவரங்களை நாகை மாவட்ட கலெக்டர் எடுத்துக்கூறினார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கல்யாணசுந்தரம், துணை இயக்குனர் பன்னீர்செல்வம், வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story