தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே புதியவகை கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே புதியவகை கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 31 Dec 2020 7:27 AM GMT (Updated: 31 Dec 2020 7:27 AM GMT)

தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே புதியவகை கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதுவகை கொரோனா ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 25ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே புதியவகை கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ பொதுமக்கள் காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் 3 நாள் 4 நாட்கள் கழித்து நுரையீரல் பாதிப்புடன் வராதீர்கள். அதற்கு முன்னரே வந்தால் நிவாரணம் பெறலாம். கிங்க்ஸ் மருத்துவமனையில் 1618 படுக்கைகள் மருத்துவமனையில் உள்ளனர். இதில் 58 நோய்த்தொற்று உள்ளவர்கள் மட்டுமே உள்ளனர். 125 பிசிஆர் சோதனையில் நெகட்டிவ் வந்தாலும் நுரையீரல் தொற்றுடன் உள்ளவர்கள் உள்ளனர்.

120 படுக்கைகள் இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்காக தயார் நிலையில் வைத்துள்ளோம். இதுவரை முதல் நாளிலிருந்து ஒரே ஒரு பாசிட்டிவ் மட்டுமே வந்துள்ளது. எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் எடுக்கப்பட்டவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. நேற்று 20 பேர் வந்தவர்களுக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. அவர்கள் தொடர்புடைய 20 பேருக்கு பாசிட்டிவாக இருந்தது.

நேற்றிரவு 2 பேருக்கு பாசிட்டிவ் ஆகியுள்ளது. ஒருவர் கோவை, ஒருவர் சென்னை. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாதிரி புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வரும் நபர்களை மூன்று வகையாக சேகரித்தோம். மத்திய அரசு நமக்கு சொன்னது கடைசி 14 நாட்கள் பார்த்தால் போதும் என்றார்கள். ஆனால் நாம் கடந்த ஒரு மாதமாக (நவ.25) வந்தவர்களை லிஸ்ட் எடுத்து சோதனை செய்கிறோம்.

அதில் 2080 பேரை நாம் கண்டறிந்துள்ளோம். அதில் 1593 பேரை கண்டுபிடித்து பரிசோதனை செய்துவிட்டோம். 487 பேர் உள்ளனர். அதில் 54 பேர் மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் சில பேர் தங்கள் விலாசத்தை மாற்றி கொடுத்துள்ளனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு தவிர மற்ற மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஒன்றுமில்லை.

சென்னை செங்கல்பட்டில் தனி அமைப்பாக காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறையும் அனைவரும் பார்த்து வருகின்றனர். தமிழ்நாட்டிம் மட்டும் தான் தமிழகம் வருபவர்கள் 96 மணி நேரம் முன்னர் பிசிஆர் பரிசோதனை முடித்துத்தான் வரவேண்டும், அப்படி வந்தவுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருக்கவேண்டும் என நடைமுறை உள்ளது. 

புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். ஓமந்தூராரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம். பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து முதல்வரும், அரசும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளோம். அதை கட்டாயம் கடைபிடித்து பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாடணும். கொண்டாட்டங்களில் ஈடுபடும் இடங்களில் எளிதாக கோவிட் பரவுவதை நாங்கள் பல ஆய்வுகள், உதாரணங்கள் மூலம் கண்டறிந்துள்ளோம்.

மொத்தம் 42 பேர் மாதிரிகளை அனுப்பி வைத்துள்ளோம். இதில் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அடங்கும். அதில் 30 ஏற்கெனவே அனுப்பப்பட்டது. நேற்று 10 அனுப்பப்பட்டது. இன்று காலை 2 அனுப்பியுள்ளோம். வழக்கமான கொரோனா பரிசோதனை வேறு, புனேவில் நடக்கும் ஜினோமிக் அனாலைசிஸ் என்பது வேறு.

தற்போது புனே தவிர மத்திய அரசின் தேசிய மையங்கள் 2 உள்ளது. அங்கும் அனுப்பியுள்ளோம். மாற்றமடைந்த கொரோனா வைரசுக்கான பரிசோதனையான ஜினோமிக் ரிசல்ட் என்பது சற்று கடுமையான பரிசோதனை என்று சொல்கிறார்கள். அதனால் சற்று தாமதமாகிறது. ஏற்கெனவே உள்ள கொரோனாவுக்கும் இப்போது இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கும் சிகிச்சைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. புதியவகை கொரோனா குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம்” என்று தெரிவித்தார்.. 


Next Story