நெல்லை-மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் - கோட்ட மேலாளர் தகவல் + "||" + Nellai-Madurai double track work to be completed by March - Divisional Manager
நெல்லை-மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் - கோட்ட மேலாளர் தகவல்
நெல்லை-மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்று ரெயில்வே கோட்ட மேலாளர் லெனின் தெரிவித்தார்.
நெல்லை,
மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லைக்கும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் லெனின் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயணிகள் தங்கும் அறை, நடைபாதை, சரக்கு இறங்குதளம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தற்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லைக்கும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டன. மதுரை-நெல்லை இடைேய இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். தொடர்ந்து இரட்டை ரெயில் பாதையில் ரெயில்கள் இயக்கப்படு்ம.
கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ரெயில்களில் பெரும்பாலான ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசின் வேண்டுகோள் விடுக்கும் ரெயில்களும் உடனடியாக இயக்கப்படுகிறது. விரைவில் அனைத்து ரெயில்களும் இயக்கப்படும்.
நெல்லை-பாலக்காடு இடையே நாளை (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயில் கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து அவர், அம்பை, செங்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.