ரே‌ஷன் கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்


ரே‌ஷன் கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்
x
தினத்தந்தி 3 Jan 2021 7:56 AM GMT (Updated: 3 Jan 2021 7:56 AM GMT)

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.2,500 பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

சென்னை,

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

 இதன்படி சுமார் 2 கோடியே 10 லட்சம் பேர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக வீடு வீடாக முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணியும் நடைபெற்றது.

நாளை முதல் ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பொருட்கள் கொடுக்கப்பட உள்ளது. காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பொருட்கள் வழங்க ரே‌ஷன் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதிக எண்ணிக்கையில் ரே‌ஷன் கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க டோக்கன்களில் நாள், நேரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 4-ந் தேதிக்குரிய டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே நாளை பொருட்கள் வழங்கப்படும்.

மற்றவர்களுக்கு எந்தெந்த தேதியில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த தேதியில் சென்றால்தான் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பட்ட நாள் படி பொருட்கள் வாங்க முடியாவிட்டால், கடைசி நாளான 13-ந்தேதி சென்று வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டும்.

ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் சுழற்சி முறையில் தெருவாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அட்டவணையையும் தயார் செய்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலையில் பொருட்கள் வாங்க முடியாத நபர்களுக்கு அவர்கள் மாலையில் வரும் பட்சத்தில் திருப்பி அனுப்பாமல் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.2,500 ரொக்கப் பணத்தை ரூ.2,000 நோட்டு, ரூ.500 நோட்டு என 2 தாள்களாக பொதுமக்களின் கைகளில் கொடுக்க வேண்டும். கவர்களில் போட்டு கொடுக்கக்கூடாது என ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.2,000 தாள் இல்லாத பட்சத்தில் ஐந்து 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக கொடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மாலை 5.30 மணி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் விடுபடாமல் அடையாள அட்டை வழங்கி பொருட்களை வழங்கிவிட வேண்டும். வரிசையில் காத்திருக்கும் யாரையும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது.

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வருகின்ற வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களை வரிசையில் நிற்கவைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி நெரிசலை தவிர்க்க வேண்டும் என்றும் கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பு பொருட்களை பெற வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.


Next Story