லண்டனில் இருந்து வந்த மேலும் 3 பேருக்கு புதிய வகை கொரோனா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Jan 2021 8:01 PM GMT (Updated: 4 Jan 2021 8:01 PM GMT)

லண்டனில் இருந்து வந்த மேலும் 3 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, 

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய பயணிகளுக்கு மரபியல் ரீதியாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு மரபணு மாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பரிசோதனை முடிவில் மேலும் 3 பேர் இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுண்கிருமி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 44 பேரின் மரபணு சோதனை மாதிரி அனுப்பியதில் 12 பேரின் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளது. 32 பேரின் பரிசோதனை மாதிரிகள் முடிவு வர வேண்டிஉள்ளது என்று அவர் கூறினார்.

புதிதாக பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் ராயப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி, மற்றொருவர் முகப்பேரை சேர்ந்த 21 வயது வாலிபர், மேலும் ஒருவர் அண்ணாநகரை சேர்ந்த 48 வயது பெண் ஆவார். இவர்களும் கிங்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story