சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்
x
தினத்தந்தி 5 Jan 2021 10:22 AM GMT (Updated: 5 Jan 2021 10:22 AM GMT)

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 6 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை

சென்னையில் ஏற்கனவே நள்ளிரவு முதல் மழை விடாமல் பெய்து வரும் நிலையில், மேலும் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதலே கனமழை பெய்துவருகிறது. தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை, பல்லாவரம், உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை கனமழையாகவும் பின்னர் மிதமான மழையாகவும் பெய்துவருகிறது.

வேளச்சேரி, ஆதம்பக்கம், பெரியார்நகர் என பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிற்காமல் பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாம்பரம் சுரங்கப்பாதை, வழக்கம்போல இந்த மழையிலும் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கன மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பகுதிவாசிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சென்னையின் பல சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். கிண்டி தொழிற் பேட்டையில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லக்கூடிய சைதாப்பேட்டை பஜார் சாலையில் கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் தேங்கியுள்ளதால் பஜார் சாலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும்  கனமழையால் ,மெட்ரோ ரெயில் உயர்மட்ட மேம்பாலங்களில் தேங்கும் மழைநீரானது, சாலைகளில் கொட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மெட்ரோ ரெயில் தடங்களில் தேங்கும் மழை நீரை, நேரடியாக மழை நீர் வடிகால்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை வானிலை மையம் கூறி இருப்பதாவது:-

சென்னையில் அடுத்த 3 முதல் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை நீடிக்கும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கிழக்கு திசை காற்று காரணமாக சென்னை மழைப்பொழிவை பெற்றுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

Next Story