பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு:அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு:அதிமுக பிரமுகர்  உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2021 1:12 PM GMT (Updated: 6 Jan 2021 1:12 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் பறித்து வந்ததாக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து, கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் பறித்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என 4 பேர் கைது செய்யபட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவரும் சரணடைந்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பத்தில் அதிமுகவினருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர்கள் மீது கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், அவர்கள் 1 ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு, சபரிராஜனின் பெற்றோர்கள் குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் 2 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையைத் தொடங்கிய சிபிஐ  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (27), அதிமுக நிர்வாகி அருளானந்தம் (34) 3 பேரை செவ்வாய்க்கிழமை மாலை சிபிஐ போலீசார் கைது செய்தனர். மூன்று பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  மூன்று பேரையும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.  அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story