‘‘பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான் சிறுபான்மையினருக்கு உண்மையான அச்சுறுத்தல்''மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


‘‘பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான் சிறுபான்மையினருக்கு உண்மையான அச்சுறுத்தல்மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Jan 2021 11:31 PM GMT (Updated: 6 Jan 2021 11:31 PM GMT)

‘‘பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான் சிறுபான்மையினருக்கு உண்மையான அச்சுறுத்தல்'' என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை,

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் ‘நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்' எனும் தலைப்பில் கருத்தரங்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, தயாநிதி மாறன் எம்.பி., மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, த.வேலு, சிற்றரசு உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், இலியாஸ் காலிஸ் காசினி, சதியுத்தீன் பாசில் பாகவி, அபுபக்கர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. அப்துல்ரகுமான், நவாஸ்கனி எம்.பி., திருப்பூர் அல்தாப், அப்துல் சமது, பஷீர் அகமது, முகமது பஷீர், முன்னாள் நீதிபதி அக்பர் அலி, யாகூப், பாத்திமா முஷபர், ஷாஜகான், முகமது அலி, நிஜாமுதீன் உள்பட சிறுபான்மை அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனைத்து மதங்களின் ஒற்றுமையில்தான் மக்கள் ஒற்றுமை அடங்கியிருக்கிறது. அதேபோல மக்களின் ஒற்றுமையில்தான் மதங்களின் ஒற்றுமை இருக்கிறது. அதேபோல நல்லாட்சி அமைந்தாலே இதயங்கள் இணைந்திடும். இதயங்கள் இணைந்தாலே நல்லாட்சி மலர்ந்திடும். ஆனால் இதை தடுக்க சிலர் சதித்திட்டம் போடுகிறார்கள். இன்னும் 4 மாதங்களில் நல்லாட்சி மலர்ந்து நம்பிக்கை உருவாக்கிடும் சூழ்நிலை உருவாக போகிறது.

அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் மக்களின் மனம் சார்ந்தது. இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக சேர்த்து மக்களை ஏமாற்றமுடியாது.

தி.மு.க.வுக்கும், சிறுபான்மை சமூகத்துக்கும் இடையேயான உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. சிறுபான்மையினருக்கு துரோகம் செய்த அரசு தான் அ.தி.மு.க. அரசு. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரண் என்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் சிறுபான்மையினருக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கிறது.

‘என் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது தான். இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கமாட்டேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் அவரது கனவை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றவில்லையே...

எதற்கெடுத்தாலும் பா.ஜ.க. அரசின் திட்டங்களை ஆதரிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ள வெட்கமாக இல்லையா? ரவுடிதான் தன்னை அடிக்கடி ரவுடி... ரவுடி... என்று பெருமையாக பேசுவான். அதேபோல இவர் தன்னை விவசாயி என்று கூறிக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றி கொண்டிருக்கிறார்.

பச்சை துண்டு போட்டு போஸ் கொடுத்தால் விவசாயி ஆகிவிடமுடியாது. ‘நகத்தில் மண் இருக்கவேண்டும், அவர்தான் விவசாயி' என்றார் அண்ணா. ஆனால் விவசாயிகளை நசுக்கி ரத்தக்கறை படிந்த கையுடன் எடப்பாடி பழனிசாமி அலைந்து கொண்டிருக்கிறார். இதுதான் உண்மை.

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். எல்லா இடங்களுக்கும் போக நேரமில்லை, வாய்ப்பில்லை என்றாலும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு, யார், யார் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நான் முடிவு செய்திருக்கிறேனோ, அந்த இடங்களுக்கெல்லாம் நான் தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கிறேன். சில இடங்களில் அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு என்கிறார்கள். அதைக்கூட நாம் விடக்கூடாது. நாம் தயாராக இருப்பதை விட, இன்றைக்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுதான் உண்மை. எனவே அந்த சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் த.மஸ்தான் வரவேற்றார். ரஹமதுல்லா நன்றி கூறினார்.

Next Story