மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க அதிகாரம்அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் + "||" + Edappadi Palanisamy, Coalition to O. Panneerselvam, Power to decide on block allocation

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க அதிகாரம்அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க அதிகாரம்அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
அ.தி.மு.க.வில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடைபெற இருக்கிறது. 2011-ம் ஆண்டு முதல், 2 முறை தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துவரும் அ.தி.மு.க., 3-வது முறையாகவும் வாகை சூடி, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 2,200 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், 1,500 சிறப்பு அழைப்பாளர்கள் வந்திருந்தனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 11 மணிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து, காலை 11.05 மணிக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வந்தார்.

கூட்டம் தொடங்கியதும், மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, மேடையில் இருந்த மூத்த நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, காலை 11.10 மணிக்கு அ.தி.மு.க. பொதுக்குழு தொடங்கியது. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். முதலில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார். இதையடுத்து, மறைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 115 பேர் மறைவுக்கும், முக்கிய பிரமுகர்கள் 9 பேர் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பின்னர், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- * 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதை ஏகமனதாக ஏற்போம். வெற்றிவாகை சூட கடுமையாக உழைப்போம்.

* கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தமைக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

* இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமைகளை வழங்கவும், அதிகார பரவலுக்கு அடித்தளமிட, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுமான, மாகாண கவுன்சில் (மாகாண சபைகள்) முறை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுவதை முறைப்படுத்தி, புது நெறிகளை வகுத்து, அரசிதழில் வெளியிட்டமைக்கு, அ.தி.மு.க. அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் மதிப்பீடு செய்யப்பட்டு, டிஜிட்டல் இந்தியா - 2020 தங்க விருதினையும், கோவில் மேலாண்மை திட்டத்திற்கு எடுத்துக்காட்டான மென்பொருள் தயாரித்தமைக்கு வெள்ளி விருதினையும் பெற்றிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

* உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, முன்னேற்றப்பாதையில் மனதை வைத்து, முழு மூச்சாய் அதற்காக தினம் உழைத்து, தமிழ்நாட்டை ஓங்கு புகழ் பெறச் செய்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

* ஏழை, எளிய மக்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் அளித்திட, தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் ‘முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்’ எனும் மருத்துவ மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

* தொலைநோக்கும் திட்டம் -2023 கொள்கைக்கு உறுதுணையாகவும், பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு உறுதியான வீடுகளை ஏழை, எளியோருக்கு அளிக்கும் வகையிலும், நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் பயனடையும் 6 மாநிலங்களில் ஒன்றாக, தமிழகத்தை இணைத்திட்ட பிரதமருக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடமளிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்றிட, சுழல்நிதி ஏற்படுத்தி இருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

* நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிப்புகளுக்கு உள்ளான தமிழ்நாடு விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.

* தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட, பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.2,500 ரொக்கமும் வழங்கும் அ.தி.மு.க. அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

* அ.தி.மு.க. அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிர்வாக திறமைக்கும், மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல், பக்குவமோ, பண்பாடோ இன்றி விமர்சித்துவரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவருடய கட்சியினருக்கும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வெற்றி வியூகம் வகுக்கவும், கூட்டணி கட்சிகளையும், தொகுதி பங்கீட்டையும் முடிவு செய்யவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

* தமிழ்நாட்டில் தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி, அண்ணாவும், எம்.ஜி.ஆரும் கனவு கண்டவாறு உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம்.

* அ.தி.மு.க.வில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு் குழுவுக்கு ஒப்புதலும், அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்ட துளிகள்

* அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வருவோரை வரவேற்கும் விதமாக மதுரவாயல் மேம்பாலத்தில் இருந்து மண்டபம் வரை சாலையில் வாழை மரங்கள் மற்றும் கரும்பு தோரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலையோரங்களில் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. சாலையோரங்களில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

* கூட்டத்துக்கு வருவோரை வரவேற்கும் விதமாக மண்டபத்தின் நுழைவுவாயிலில் பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், கரகம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. மேலும் மண்டபத்துக்கு செல்லும் பகுதியில் ஆங்காங்கே அ.தி.மு.க. கலைக்குழு சார்பில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

* கூட்டம் நடந்த மண்டபத்தின் நுழைவுவாயில் மற்றும் கூட்டம் நடந்த அரங்கின் நுழைவுவாயில் அருகே பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கைகோர்த்து இருப்பது போன்ற படமும், பின்புறம் தலைமை செயலக தோற்றமும் இடம்பெற்றிருந்தன. ‘வளர்ச்சி பாதையில் முதலிடம், மகிழ்ச்சி பாதையில் தமிழகம்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன.

* பொதுக்குழு கூட்டரங்கின் முன்பு அனைவரையும் வரவேற்கும் விதமாக யானை போன்ற தத்ரூபமான பொம்மைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த பொதுக்குழு கூட்டங்களில் மதிய உணவாக அனைவருக்கும் சைவ சாப்பாடுதான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சைவ உணவுடன், அசைவ உணவும் வழங்கப்பட்டது. அசைவ பிரியர்களுக்கு தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை தொக்கு பரிமாறப்பட்டது.

* சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் மேடையில் தலைவர்களுக்கு இடைவெளி விட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் தலைவர்கள் முககவசம் அணிந்தபடி அமர்ந்திருந்தனர். அதேபோல கூட்டத்தில் பங்கேற்ற அத்தனை நிர்வாகிகளும் முககவசம் அணிந்தே பங்கேற்றனர். முன்னதாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ்களுடன் அழைப்பிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

* காலை 8.50 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலை 11.15 மணிக்கு தான் தொடங்கியது. பிற்பகல் 3.15 வரை தொடர்ந்து 4 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
2. 10 லட்சம் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போன்றது; எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
10 லட்சம் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போன்ற செயல் என்று எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
3. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவை எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி திறந்து வைக்கிறார்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவை வருகிற 22-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
4. காற்றில் பறக்கும் வாக்குறுதியை வழங்கும் கட்சி தி.மு.க. கொடுத்த வாக்கை நிறைவேற்றும் கட்சி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தாக்கு
காற்றில் பறக்கின்ற வாக்குறுதியை வழங்குகின்ற கட்சி தி.மு.க. என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற கட்சி அ.தி.மு.க. என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5. ரூ.2,640 கோடி மதிப்பில் கல்லணை கால்வாய் புனரமைக்கப்படுவதால் பயிர் சாகுபடி பரப்பளவு பெருகும் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
ரூ.2,640 கோடி மதிப்பில் கல்லணை கால்வாய் புனரமைக்கப்படுவதால் பயிர் சாகுபடி பரப்பளவு பெருகும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.