தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் - பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி


தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே  தீர்மானிக்கும் - பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி
x
தினத்தந்தி 11 Jan 2021 1:09 PM GMT (Updated: 11 Jan 2021 1:09 PM GMT)

தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறி உள்ளார்.

திருச்சி: 

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எதிர்வரும் சட்டசபை தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். 

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் அதிமுக பா.ஜனதா கூட்டணி தொடரும் என்று கூறினர்.

இதனையடுத்து பா.ஜனதா   அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கருதப்பட்ட நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜனதா தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பா.ஜனதா  தலைமையே அறிவிக்கும் என தெரிவித்தார். அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் பலர் முருகனுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உறுதியாக கூறினர். சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக, தன்னுடைய உறுதியை பதிவு செய்திருந்தது.

கடந்த 9-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. முதுகில் ஏறித்தான் பயணம் செய்ய முடியும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி' என்றார்.

மேலும் கூட்டணி ஆட்சி கனவோடு யாரும்  அணுகாதீர்கள் என கூறினார். கூட்டணி ஆட்சி என்பதற்கு தேவை இல்லை என கூறினார்.

இந்த நிலையில் திருச்சியில் நிருபர்களிடம் பேசிய பா.ஜனதா  தேசிய பொதுச்செயலாளரும், பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரே அந்த கட்சியே தீர்மானிக்கும். கூட்டணியில் பெரிய கட்சி என்பதால் அ.தி.மு.க.தான் முடிவு எடுக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் எங்களை ஆதரிக்கின்றனர்.  கே.பி.முனுசாமி கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறினார்.

Next Story