வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை -டாக்டர் ராமதாஸ் உறுதி


வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை -டாக்டர் ராமதாஸ் உறுதி
x
தினத்தந்தி 11 Jan 2021 2:02 PM GMT (Updated: 11 Jan 2021 2:02 PM GMT)

வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னை

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

2021 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு பற்றியும், சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

 தமிழக அமைச்சர்கள்  பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.

அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை  கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.



Next Story