பொங்கல் பரிசு, ரொக்கத்தொகை வினியோகம் 25-ந் தேதிவரை நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு


பொங்கல் பரிசு, ரொக்கத்தொகை வினியோகம் 25-ந் தேதிவரை நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2021 10:17 PM GMT (Updated: 11 Jan 2021 10:17 PM GMT)

பொங்கல் பரிசு, ரொக்கத்தொகையை அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பெறாமல் விடுபடுவதைத் தவிர்க்க, அவற்றை வினியோகம் செய்யும் கால அவகாசத்தை 25-ந் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கத்தொகையை முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் (ஓ.ஏ.பி.), அன்னபூர்னா திட்ட பயனாளிகள் (ஏ.என்.பி.) ஆகிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும்படி ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஓ.ஏ.பி. மற்றும் ஏ.என்.பி. பயனாளிகள் மொத்தம் 4 லட்சத்து 15 ஆயிரத்து 612 பேர் உள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 720 பேருக்கு பொங்கல் பரிசு மற்றும் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 ஆயிரத்து 892 பேருக்கு அவை வழங்கப்படவில்லை.

எனவே இந்த பயனாளிகளுக்கு ஏற்கனவே அவர்கள் வைத்துள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

அச்சிடப்பட்ட புதிய மின்னணு அட்டை இல்லை என்று காரணம் காட்டி ஓ.ஏ.பி. மற்றும் ஏ.என்.பி. பயனாளிகளை, பொங்கல் பரிசு மற்றும் தொகை வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. ஏற்கனவே அச்சிடப்பட்டு, பொங்கல் பரிசு மற்றும் தொகை வழங்கப்படாமல் இருக்கும் ஓ.ஏ.பி. மற்றும் ஏ.என்.பி. ரேஷன் அட்டைதாரர்களுக்கு காலதாமதமின்றி அவற்றை வழங்க வேண்டும்.

பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் தொகையை ஜனவரி 4-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் வினியோகம் செய்யவும், அந்த நாட்களில் அவற்றை பெறாதவர்களுக்கு 13-ந் தேதியன்று வழங்கவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.யாரும் விடுபட்டுவிடாமல் இருப்பதற்காக 18-ந் தேதி முதல் 25-ந் தேதிவரை (ரேஷன் கடை விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசையும், தொகையையும் வழங்க வேண்டும். பொங்கல் துணிப்பையை பெறாதவர்களுக்கு அதை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story