திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு
x
தினத்தந்தி 12 Jan 2021 12:12 PM GMT (Updated: 12 Jan 2021 12:12 PM GMT)

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவ்வாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக ஒரு காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் பேசியதன் மூலம் யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story