சந்தைகளை குத்தகைக்கு விடுவதால் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் - உயர்நீதிமன்றம் கருத்து


சந்தைகளை குத்தகைக்கு விடுவதால் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் - உயர்நீதிமன்றம் கருத்து
x
தினத்தந்தி 12 Jan 2021 12:42 PM GMT (Updated: 12 Jan 2021 12:42 PM GMT)

சந்தைகளை குத்தகைக்கு விடுவதால் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகள் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சேலம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் வ.உ.சி. மலர் சந்தையில் பெரிய கடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் என்றும் சிறிய கடைகளுக்கு 15 ரூபாய் என்றும் சேலம் மாநகராட்சி கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க சூரமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஒப்பந்ததாரர் முருகன் மாநகராட்சி நிர்ணயம் செய்த தொகையை விட 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை அதிகமாக வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முருகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் முருகனின் ஒப்பந்தத்தை ரத்து செய்த மாநகராட்சியின் உத்தரவுக்கு தடை விதித்தது. 

இதன் பிறகு மீண்டும் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததைதைப் பெற்ற முருகன், தொடர்ந்து கூடுதலாக கட்டணம் வசூலித்து வந்ததாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், ஜெகததீஸ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, மலர் சந்தையில் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை தனியாருக்கு டெண்டர் விட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் சந்தைகளை மாநகராட்சி ஏன் நடத்தக் கூடாது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்கான மானியங்களையும் பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்வதற்கான இடத்தை ஒப்பந்ததாரர்களுக்கு குத்தகைக்கு விடுவதால் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி சேலம் மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Next Story