போகி பண்டிகையால் புகை மண்டலம்; 14 விமானங்கள் தாமதம்


போகி பண்டிகையால் புகை மண்டலம்; 14 விமானங்கள் தாமதம்
x
தினத்தந்தி 13 Jan 2021 7:18 PM GMT (Updated: 13 Jan 2021 7:18 PM GMT)

போகி பண்டிகைக்காக பழைய பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் 14 விமானங்கள் தாமதமாக சென்று வந்தன.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள், போகி பண்டிகைக்காக நேற்று அதிகாலையில் இருந்து தங்கள் வீடுகளின் முன்பு தெருக்களில் பழைய பொருட்களை பெருமளவு தீ வைத்து எரித்தனர். இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் சிறிது சிறிதாக சென்னை விமான நிலைய ஓடுபாதை மைதானத்தை சூழ்ந்தது.

விமான நிலைய பகுதியில் நேற்று பனிப்பொழிவும் சற்று அதிகமாக இருந்தது. பனிப்பொழிவுடன், புகை மண்டலமும் சோ்ந்து கொண்டதால் விமானநிலைய ஓடுபாதை சற்று தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டது. எனினும் காலை 9 மணி வரை விமான சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் அதன்பிறகு விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெங்களூரு, கொல்கத்தா, நாக்பூா், ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 8 விமானங்கள் சென்னையில் தரை இறங்குவதில் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பெங்களூரு, ஆமதாபாத், மும்பை, புனே, கொச்சி, பாட்னா ஆகிய 6 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 14 விமானங்கள் திடீா் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளானாா்கள்.

போகி பண்டிகையின்போது ஏற்படும் புகை மண்டலத்தால் வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் அதிகாலையில் இருந்தே விமான சேவைகள் பாதிக்கப்படும். இதனால் விமான நிலையத்தையொட்டி வசிப்பவர்கள் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய ஆணையம்வேண்டுகோள் விடுத்து இருந்தது.

இதன் காரணமாக இந்த ஆண்டு காலை 9 மணிக்கு மேல்தான் விமான சேவைகள் ஓரளவு பாதிப்புக்கு உள்ளானது. மதியம் 12 மணிக்கு பிறகு விமான சேவை சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story