இன்று பொங்கல் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 14 Jan 2021 12:00 AM GMT (Updated: 13 Jan 2021 11:14 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற பாரதியாரின் பாடலுக்கேற்ப, சிறப்புமிக்க வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காகவும், ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை காத்திட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தை இயற்றியது. வெள்ளம், வறட்சி, புயல் மற்றும் பூச்சி நோய் போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,141 கோடி இழப்பீட்டுத்தொகை பெற்றுத் தந்தது, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை கட்டியது போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்த இனிய தைப்பொங்கல் திருநாளில் விவசாயம் செழிக்கட்டும், விவசாயிகள் மகிழட்டும். மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாட்டில் நலமும், வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமானஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ் புத்தாண்டும் இணைந்து வரும் தை தமிழர் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன், நகைக் கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என்ற உறுதியினை வழங்குகிறேன். அதுபோலவே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமையாக உள்ள கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும். இவற்றுக்கான பொறுப்பை தி.மு.க. அரசு ஏற்கும்.

தமிழ் மக்கள் வாழ்வில் இருள் அகன்று, வளமும் நலமும் வெளிச்சம் பாய்ச்சிடத் தமிழர் திருநாளை வரவேற்று அனைவருக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘துன்பமும், நோயும் விவசாயிகளுக்கு தொல்லைகளும் மாறிய புத்தாண்டாக இந்த தமிழ்ப் பொங்கல் விழா அமைந்து புதிய மாற்றங்களை-நம்பிக்கைகளை பொழிந்து மகிழ்ச்சி பொங்கும் விழாவாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். தமிழக காங்கிரஸ் சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.’’ என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் மகிழ்வுடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள சொந்தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்தமாக தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் புதிய ஒளியை ஏற்றட்டும்.’’ என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தமிழர்களின் புத்தாண்டின் முதல் நாளும் ஆகும். இருள் விலகி தமிழகத்துக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெரும் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இனிய பொங்கல் திருநாளில் விவசாயிகளின் வாழ்வில் இன்னல் நீங்கி, மகிழ்ச்சி மலரவேண்டும். மக்கள் மனதில் இருள் நீங்கி இன்பம் பொங்கிடவேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தமிழர் திருநாள் என அழைக்கப்படும் ஒரே பண்டிகை பொங்கல் விழா மட்டுமே. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வேளாண் குடிகளான தமிழ் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘ தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், விவசாயிகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இதேபோல தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்,த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்,

கவிஞர் வைரமுத்து, திருநாவுக்கரசர் எம்.பி., பாரிவேந்தர் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் கோல்டன் அபுபக்கர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஜி.சம்சுதீன், காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில செயல் தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை, இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அகமது, கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் யாதவ், லோக் தந்திரிக் ஜனதா தளம் மாநில தலைவர் டி.ராஜகோபால், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம்,

அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், தமிழக முற்போக்கு கட்சி தலைவர் க.சக்திவேல், அம்பேத்கர் மக்கள் முன்னணி நிறுவன தலைவர் கோ.வைரபாண்டியன், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, அருந்ததி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story