உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு


உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Jan 2021 3:03 AM GMT (Updated: 14 Jan 2021 3:03 AM GMT)

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 430 மாடுபிடி வீரர்கள் உடல்தகுதியுடன் தேர்வாகியுள்ளனர்.

மதுரை,

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டுள்ளன.

நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும். கலப்பின மாடுகள் அனுமதிக்கப்படவில்லை. போட்டியில் பங்கேற்கும் மாடுகள் அனைத்திற்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே காளைகள் வாடிவாசலில் களமிறங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. அவ்வாறு பங்கேற்கும் மாடுகளின் வயது, அவற்றின் திமில், உடல்நிலை உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்படுகின்றன.

இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அனுப்பி விடப்பட்டன. அதன் பின்னர் பிற காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் என்ற அடிப்படையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அன்பழகன், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் நிகழ்ச்சியைக் காண வந்துள்ளனர். மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வர இருக்கின்றனர். இன்றைய போட்டிகளுக்கான பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story