மாநில செய்திகள்

தமிழ் மொழி, கலாச்சாரம் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் - ராகுல் காந்தி + "||" + Tamil language and culture are essential for the future of India - Rahul Gandhi

தமிழ் மொழி, கலாச்சாரம் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் - ராகுல் காந்தி

தமிழ் மொழி, கலாச்சாரம் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் - ராகுல் காந்தி
தமிழ் மொழியும் தமிழக மக்களின் கலாச்சாரமும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மதுரை,

தமிழர்களின் புகழ்பெற்ற வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவனியாபுரத்திற்கு வந்துள்ளனர். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண அவனியாபுரம் வந்தார்.

அதனஒ தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண அவனியாபுரத்திற்கு வருகை தந்தார். அவருடன் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வி.ஜ.பி. மேடையில்  ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தான் முதன்முறையாக நேரில் காண்பதாகவும், இனி வரும் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண நிச்சயம் அவனியாபுரத்திற்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழர்களின் பாரம்பரியத்தை நேரில் கண்டு ரசிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஜல்லிக்கட்டு விழா மிகவும் நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாடுகளுக்கும், மாடுகளை அடக்கும் இளைஞர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக மக்களின் உணர்வு, கலாச்சாரம், வரலாறு ஆகியவை குறித்து நேரில் கண்டு தெரிந்து கொள்வதற்காக நான் வந்துள்ளேன். தமிழ் மொழியும் தமிழக மக்களின் கலாச்சாரமும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. 

தமிழக மக்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தியுள்ளனர். தமிழக மக்களோடு நின்று தமிழ் பண்பாட்டையும், வரலாற்றையும் காக்கும் கடமை எனக்கு உள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.