தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்


தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2021 2:32 PM GMT (Updated: 14 Jan 2021 2:32 PM GMT)

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.

சென்னை:

தமிழர் திருநாளாம் தை திருநாள் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படும். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, பண்டிகையை மகிழ்ச்சி பொங்க மக்கள் கொண்டாடினர்.  பொங்கல் திருநாளை ஒட்டி, பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொங்கலையொட்டி வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாடை உடுத்தி‌, மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்து வருகின்றனர். 

இதேபோல் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு  போட்டிகளுடன் பொங்கல் விழாக்கள் நடைபெறுகின்றன. பொது வெளியில் மக்கள் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இந்த திருவிழாக்கள், சமத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதாக உள்ளன. 

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் கொரோனாவையும் மறந்து சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பஜனை கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கிராமத்தை போல் ஒன்றாக சேர்ந்து வீடுகளில் வண்ண வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து, பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்பில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கோயம்புத்தூர்:

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, நகராட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து பொங்கல் விழாவை நடத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 750 பழங்குடியின மக்களுக்கு வேஷ்டி சேலை மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தூய்மைப் பணியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் சமத்துவப் பொங்கல் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சர்வமதப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற ஒற்றுமைப் பொங்கல் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல்விழாவில் போலீசாருடன், புகார் கொடுக்க வந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் ஏராளமான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டி போட்டியில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சிலம்பம் சுற்றினர். வாள் சண்டையும் செய்து காட்டினர்.

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேளதாளங்கள் முழங்க காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. முன்னதாக பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடியில் சூரியன் உதிக்கும் முன்னே பெண்கள் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். விவசாய நிலத்தில் விளைந்த காய்கறிகளும் படையலில் இடம்பெற்றிருந்தன.

கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் அதிகாலையிலேயே அங்குள்ள தேவாலயம் முன் ஏராளமானோர் ஒன்றுகூடி பொங்கல் வைத்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. அதேபோன்று, முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில், சிலம்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறுவிதமான கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை வடமாநில சுற்றுலா பயணிகளும் கண்டு களித்தனர்.

புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிரான போராட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த துணை ராணுவ படையினர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண வண்ண தோரணங்களால் அலங்கரித்து பொங்கலிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

திருச்சி நாளந்தா வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இறுதி ஆண்டு மாணவர்கள் ஒன்று சேர்ந்து மண் பானையில் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும், இலங்கை யாழ்பாணத்தில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். வீடுகள், கடைகள், கோயில்களுக்கு முன் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

காஞ்சிபுரத்தில் விவசாயி ஒருவர் ஒரு டன் எடை கொண்ட செங்கரும்பை வைத்து பொங்கல் பானை போன்று வடிவமைத்து பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டினார். பொங்கல் பண்டிகையின் சிறப்பை இளம் தளமுறைக்கும் உணர்த்தும் விதமாக, கீழ்கதிர்பூரை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், தனது வீட்டின் அருகே ஒரு டன் எடையுள்ள செங்கரும்பை வைத்து 15 அடி உயரம்,13 அடி அகலத்திற்கு பொங்கல் பானையை வடிவமைத்திருந்தார்.       

Next Story