கடந்த 6 நாட்களாக பெய்த கனமழை; வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி


கடந்த 6 நாட்களாக பெய்த கனமழை; வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி
x
தினத்தந்தி 15 Jan 2021 11:24 PM GMT (Updated: 15 Jan 2021 11:24 PM GMT)

கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மதிக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. பருவமழை முடிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இரவு, பகலாக இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் தூத்துக்குடியில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது. மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் மழை வெள்ளம் தேங்கியதாலும், ஸ்மார்ட்சிட்டி சாலை பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் பிரையண்ட்நகர் வழியாக சுற்றி சென்று வருகின்றன. பிரையண்ட்நகர் பகுதியிலும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அதேபோன்று திருச்செந்தூர் ரோடு, சிவந்தாகுளம் ரோடு சந்திப்பு பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது அங்கு சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயலில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வீடுகளுக்குள்வெள்ளம் புகுந்தது

தூத்துக்குடியில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு மேடான பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று உள்ளனர். பல ஆயிரக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் ஏராளமான மக்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.

சாலை மறியல்

தூத்துக்குடி தனசேகர்நகர், முத்தம்மாள்காலனி உள்பட பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல் காட்சி அளித்தது. இந்த மழைநீரை விரைந்து அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு, பிரையண்ட்நகர், கட்டபொம்மன் நகர், எட்டயபுரம் ரோடு ஆகிய 4 இடங்களில் மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

மழை அளவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர்-39, காயல்பட்டினம்- 40, குலசேகரன்பட்டினம் -33, விளாத்திகுளம்- 16, காடல்குடி-5, வைப்பார்-17, சூரங்குடி- 20, கோவில்பட்டி-22, கழுகுமலை-12, கயத்தாறு-24, கடம்பூர்-22, ஓட்டப்பிடாரம்-19, மணியாச்சி-35, வேடநத்தம்-15, கீழஅரசடி-12, எட்டயபுரம்-29, சாத்தான்குளம்-37.2, ஸ்ரீவைகுண்டம்-51, தூத்துக்குடி-40.

Next Story