அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 719 காளைகளுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர் - 48 பேர் காயம்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 719 காளைகளுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர் - 48 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Jan 2021 11:15 PM GMT (Updated: 16 Jan 2021 7:27 PM GMT)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 719 காளைகளுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர். அதில் 48 பேர் காயமடைந்தனர்.


ஜல்லிக்கட்டில் முதலில் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் முன்பு வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை மடக்கிப்பிடித்தனர். பல காளைகள் வீரர்களுக்கு சவால் விட்டு துள்ளிக்குதித்து ஓடின.

திமில் கொண்டு துள்ளிக்குதித்த காளைகளை, அங்கிருந்த காளையர்கள் மடக்கி பிடித்ததற்காகவும், வீரர்கள் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. இதில் 719 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. போட்டிக்கான நேரம் முடிந்து விட்டதால் மீதமுள்ள காளைகளுக்கு பரிசுகள் மட்டும் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டன. இதே போன்று பதிவு செய்த வீரர்களில் 600 பேர், காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 75 வீரர்கள் மட்டும் களத்தில் இறக்கிவிடப்பட்டனர்.



 



இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்தனர். இதில் அலங்காநல்லூரை அடுத்த காந்திபுரம் தவமணி (வயது 24) உள்பட 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மைதானத்தில் 5-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது சீருடைகளை பறிமுதல் செய்து, மைதானத்தை விட்டு வெளியேற்றினர். மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

போட்டியில் பங்கேற்று 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணனுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 9 மாடுகளை அடக்கிய அரிட்டாபட்டி கருப்பணனுக்கு 2 நாட்டு கறவை மாடுகள் பரிசாக வழங்கப்பட்டன. 8 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் சக்திகுமாருக்கு ஒரு பவுன் தங்கக்காசு பரிசாக அளிக்கப்பட்டது.

இதேபோல நீண்ட நேரம் வாடிவாசலில் நின்று விளையாடி, வீரர்களுக்கு போக்கு காட்டிய குருவித்துறை எம்.கே.எம்.சந்தோசுக்கு சொந்தமான காளை, முதல் பரிசான காரை தட்டிச்சென்றது. 2-வது பரிசை மேலமடை அருண் என்பவரின் காளையும், 3-வது பரிசை சரந்தாங்கி மீசைக்காரன் என்பவரின் காளையும் பெற்றன.


Next Story