“அருமையான, மகிழ்ச்சியான தருணம்” - தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முதலாவதாக போட்டுக்கொண்ட டாக்டர் கருத்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jan 2021 7:54 PM GMT (Updated: 16 Jan 2021 7:54 PM GMT)

அருமையான, மகிழ்ச்சியான தருணம் என்று தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முதலாவதாக போட்டுக்கொண்ட டாக்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை, 

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. தமிழகத்திலேயே முதலாவதாக இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்ட அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் கே.செந்தில் கூறியதாவது:-

முதல் தடுப்பூசியை போட்டு கொண்ட தருணம் அருமையானது. இதனை கடவுளின் ஆசீர்வாதமாக நினைக்கிறேன். இதற்காக 10 மாதமாக காத்திருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில்தான் தடுப்பூசி கிடைக்கும் என நினைத்தோம். ஆனால், அது தற்போதே கிடைத்திருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள எனக்கு எந்த பயமும் இல்லை. மக்களும் இதற்கு பயப்பட தேவையில்லை. உலகமே இதற்காகத்தான் காத்திருக்கிறது. கொரோனா கொடிய வைரஸ். தற்போதும் உயிரிழப்பு நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தடுப்பூசி வந்தது மகிழ்ச்சியான, பெருமை மிகுந்த தருணம். பொதுவாக ஒரு நோய்க்கு, ஒரு தடுப்பூசிதான் கண்டுபிடிப்பார்கள். ஆனால், கொரோனாவின் பாதிப்பு அதிகம் என்பதால் பெரும் செலவில் பல நாடுகள் தயாரித்ததன் மூலம், பல தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. இந்த தடுப்பூசியில் எங்களுக்கும் பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. நாங்கள் அதனை நிவர்த்தி செய்த பின்னர்தான், மக்கள் பயன்பாட்டுக்கு பரிந்துரைத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story