கொரோனா தடுப்பூசியை நிச்சயமாக நானும் போட்டுக்கொள்வேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


கொரோனா தடுப்பூசியை நிச்சயமாக நானும் போட்டுக்கொள்வேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2021 11:30 PM GMT (Updated: 16 Jan 2021 8:05 PM GMT)

நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை, 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு 101-வது வார்டில் கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவுக்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்காமல் இருந்து வந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் விடாமுயற்சி காரணமாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதை இன்றைய தினம் அனைவருக்கும் அர்ப்பணித்து இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை, முதற்கட்டமாக நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசி போடப்படும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு முறை போடப்படும். இந்த தடுப்பூசி முதல் முறை போடப்பட்டு 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறை போடப்படும். இரண்டாவது முறை தடுப்பூசி போடப்பட்ட பின் 42 நாட்கள் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன்பிறகு இந்த நோய்த்தாக்குதலில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை 166 முகாம்களில் இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என 226 இடங்களில் முதற்கட்டமாக ஒத்திகை செய்யப்பட்டு, தற்போது அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். இதை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக நாம் பார்க்கிறோம்.

முதல் கட்டமாக தமிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டும், 20,000 கோவேக்சின் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகளில் பல தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு இது முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இதில் அரசு, தனியார் என்று பார்க்கக்கூடாது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் தடுப்பூசி எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக நான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன். அனைவரும் எடுக்க வேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக இந்த தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

கேள்வி:- அரசு எவ்வளவு தான் சொன்னாலும், மக்களுக்கு இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பு வருமென்ற பயம் இருக்கிறதே?

பதில்:- முதலில் அவ்வாறு இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் முதன் முதலாக அரசு மருத்துவர் சங்க தலைவராக உள்ளவர் போட்டு் கொண்டுள்ளார் என்றால், இதில் தவறு நடப்பதற்கில்லை. முதலில் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும், போகப்போக அது சரியாகி விடும்.

கேள்வி:- கொரோனா வைரஸ் தடுப்பு முன்கள பணியில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் பேர் பணி நிரந்தரப்படுத்தப்படுவார்களா?

பதில்:- படிப்படியாக அவர்களை நிரந்தரம் செய்வதற்கு அரசு பரிசீலிக்கும். மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டுமென்றால், அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story