சென்னை, செங்கல்பட்டை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jan 2021 11:00 PM GMT (Updated: 16 Jan 2021 9:19 PM GMT)

சென்னை, செங்கல்பட்டை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 371 ஆண்கள், 239 பெண்கள் என மொத்தம் 610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 176 பேரும், கோவையில் 80 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், குறைந்தபட்சமாக திருவாரூர், கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், ராமநாதபுரத்தில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை.

இந்த பட்டியலில், வெளிநாட்டில் இருந்து வந்த இருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேரும், 12 வயதுக்குட்பட்ட 46 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 155 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 48 லட்சத்து 68 ஆயிரத்து 932 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 30 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 1,808 ஆண்களும், 3 லட்சத்து 28 ஆயிரத்து 341 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 894 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 438 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் வந்த 406 பேரில், 229 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 201 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் 26 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இங்கிலாந்தில் இருந்து இதுவரை வந்த 355 பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 26 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேற்கண்ட 46 பேரையும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் இதுவரை இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பயணிகளும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 பேரும் என மொத்தம் 35 பேருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டில் இருவரும் என 2 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12,257 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 775 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 187 பேரும், கோவையில் 76 பேரும், திருவள்ளூரில் 46 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 798 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 97.7 சதவீதம் தற்போது வரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 6 ஆயிரத்து 128 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 940 பேருக்கு, வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,031 பேருக்கும், ரெயில் மூலம் வந்த 428 பேருக்கும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 5403 பேருக்கும், கடல் மார்க்கமாக வந்த 34 பேருக்கும் என மொத்தம் 6 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story