“என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு


“என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2021 9:34 AM GMT (Updated: 17 Jan 2021 9:34 AM GMT)

எம்.ஜி.ஆர். போட்ட அஸ்திவாரத்தில் தனக்கும் பங்கு உண்டு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் எம்.ஜி.ஆரின் பிறந்ததினத்தன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதனையொட்டி சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் ‘காலத்தை வென்றவன்’ என்ற ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதன் பின்னர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது;-

“எம்.ஜி.ஆர். ஆவர்களை சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் படப்பிடிப்பு தளங்களில் இருந்திருக்கிறேன். என் வாத்தியாரான அவரை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. அவர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு. 

எம்.ஜி.ஆர் குறித்து இப்போது பேசுவதற்கான காரணம் ஏனென்றால் இதுவரை நான் அரசியலில் நுழையவில்லை. இப்போது நுழைந்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் என்ற ஆலவிருட்சத்தின் கிளைகளாகவும், அவரின் நீட்சியாகவும் இருக்கும் என்னைப் போன்றவர்கள் அவரைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். பேச மறந்தவர்கள் மீண்டும் அந்த மனிதரை நினைவுப்படுத்தி பேசுங்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story