அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 2 பேர் பலி


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 Jan 2021 7:23 PM GMT (Updated: 17 Jan 2021 7:23 PM GMT)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 2 பேர் பலியானார்கள்.

அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது வாடிவாசல் வழியாக வெளியே வரும் காளைகள் அனைத்தும் தடுப்புகள் நடுவே வேகமாக சென்று வெளியேறும். தடுப்புகள் முடிவில் அதனை பிடிப்பதற்கு காளையுடன் வந்தவர்கள் கயிறு போடுவார்கள். இப்படி அலங்காநல்லூர் அருகே உள்ள காந்திகிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) என்பவர் காளைக்கு கயிறு போட்டு பிடிக்க முயன்றார்.

அப்போது அந்த காளை இவரது கழுத்து பகுதியில் முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பிடாரிஅம்மன் கோவில் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி போலீசார் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

அப்போது காளைகளை அடக்க முயன்ற இலுப்பூர் அருகே உள்ள சாங்கிராப்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 42) என்பவர் படுகாயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று உயிரிழந்தார்.


Next Story