அ.தி.மு.க., உள்கட்சி தேர்தல் நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Jan 2021 7:24 PM GMT (Updated: 18 Jan 2021 7:24 PM GMT)

அ.தி.மு.க., உள்கட்சி தேர்தல் நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வக்கீல் சூரியமூர்த்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டை தலைமையின் கீழ் கட்சி நிர்வகிக்கப்படுகிறது. கட்சியின் சட்ட விதிகளின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து தான் பொதுச் செயலாளர் பதவிக்கு தகுந்த நபர் தேர்வு செய்யப்படுவர். இந்த விதியை மாற்ற முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும்.

ஆனால் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவிக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தரப்பில், மனுதாரர் கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் உறுப்பினர் பதவியை புதுப்பிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கை தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். அதேநேரம் மனுதாரர் விரும்பினால் சிவில் கோர்ட்டை அணுகலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story